பரந்தன் இ.ம.வி பழைய மாணவர் சர்வதேச ஒன்றியம்
Paranthan H.M.V Old students International Association


நாட்டின் சகல பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்து பல நெருக்கடிகளைச் சந்தித்தது எமது வன்னிப் பிரதேசம். அத்தனை உடைமைகளையும் இழந்து வெறும் மனிதர்களாக மிகுந்த வலியோடு மீளக் குடியேறச் சென்றவர்களின் எதிரே விரிந்து கிடந்தன பல கேள்விகள். வாழ வீடு வேண்டும். பசிக்கு உணவு வேண்டும்.பிள்ளைகளுக்கு கல்வி வேண்டும். மிதிபட்டுக் கிடந்த ஒரு இனத்தின் தலை நிமிர்வு கல்வி மட்டுமே! இதை எமது தமிழ் இனம் எத்தனையோ சந்தர்ப்பத்தில் நிரூபித்துக் காட்டியிருக்கின்றது.


எந்த வசதிகளுமற்ற வெறும் கட்டிடங்களின் நடுவே எம் பிள்ளைகளின் கல்வித்தாகம் மீண்டும் உயிர் பெறத் தொடங்கிய வலி மிகுந்த நாட்கள் அவை. எம் உறவுகளின் கல்வி செயற்பாடுகளுக்கு கை கொடுக்க முன் வந்தது புலம் பெயர் தமிழ் சமூகம். சிதறிக் கிடந்த பல பிரதேசங்களிலும் வாழ்ந்த எம் உறவுகள் கருணையோடு செய்த உதவிகளினால் தான் வன்னிப் பாடசாலைகள் மீள உயிர்ப்பு பெற்றது என்பது மறக்க முடியாத உண்மை. மறுபடியும் ஒரு புள்ளியிலிருந்து எல்லாமே ஆரம்பமானது. பரந்தன் இந்து மகாவித்தியாலயமும் இவ்வாறே உயிர் பெற்றது. பல நாடுகளில் இப்போது வசித்து வந்தாலும் தனது கிராமத்தையும் தனது பாடசாலையையும் நேசிக்கும் நல்ல உள்ளங்களின் கருணையே இன்று பரந்தன் இந்து மகாவித்தியாலயம் கம்பீரத்துடன் தலை நிமிரக் காரணமாகியது. 


இன்று பல யாழ் நகரக் கல்லூரிகளின் புலம் பெயர்ந்த பழைய மாணவர்களின் முயற்சியினால் அக்கல்லூரிகள் மிக வேகமாக முன்னேறி வருகின்றன. இதே போன்று பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தையும் ஒரு கல்லூரி என்கின்ற தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு எம் பாடசாலையின் நிலத்து இரண்டு மாணவகளினதும் புலத்து ஆறு மாணவர்களினதும் கடும் முயற்சியினால் நிறுவப்பட்டதே பரந்தன் இந்து மகாவித்தியாலய பழைய மாணவர் சர்வதேச ஒன்றியம் ஆகும். நிறுவுனர்கள் ஆன திரு தனபாலசிங்கம் சிறிரூபன், திரு சண்முகம் சிவானந்தராசா, திரு பிரசன்னா பரமநாதன், திரு நாகதீபன் இராஜேஸ்வரன், திரு புவனேந்திரன் கந்தையா, திருமதி செல்வராணி சிவகுமார், திருமதி தர்சிலா சிவபுஸ்பரூபன்,திருமதி விஜயசுதா இன்பகுலேந்திரன் ஆகிய இந்த எட்டு பழைய மாணவர்களினால் தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு இன்று பல பழைய மாணவர்களோடு சர்வதேச அளவில் இணைக்கப்பட்டு உறுதியோடு வெற்றி நடை போடத் தொடங்கியுள்ளது. 


இவர்களின் முக்கிய நோக்கங்கள் பரந்தன் இந்து மகாவித்தியாலயம் ஒரு இந்துக் கல்லுரி என்னும் தரத்திற்கு உயர்த்தப் படல் வேண்டும், இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி வசதி, சுகாதாரம், நற்பழக்கவழக்கங்கள் போன்றவை நல்ல முறையில் பேணப்படல் வேண்டும் என்பதும் மற்றும் அம் மாணவர்களுக்கும் அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கும் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும் என்பதும், எமது பாடசாலையையும் அதனைச் சார்ந்த நிலங்களையும் பசுமை நிறைந்த சூழல் ஆக்குவதும் ஆகும் .


பரந்தன் பழைய மாணவர் சர்வதேச ஒன்றியம் பல நற் திட்டங்களை நிறைவேற்றி முடித்ததுடன் தற்போது பல செயற்பாடுகளை நடைமுறைப்படுத்திக் கொண்டும் இருக்கின்றது. மேலும் எதிர்காலத்தில் பசுமைத் திட்டம் ஒன்றை முன்னெடுக்கவும் தயாராகிக் கொண்டிருகின்றது. இவை யாவும் பெறும் வெற்றிகள் அனைத்தும் எம் பாடசாலையின் பழைய மாணவர்கள் கைகளிலும் கருணை உள்ளம் கொண்ட நலன் விரும்பிகளின் கைகளிலும் பெரிதும் தங்கியுள்ளது என்றால் மிகையாகாது!